மருதமலையில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா

தொண்டாமுத்தூர், ஜன.19: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருதமலையில் தைப்பூச தேர்த் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மருதமலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 14ம் தேதி முதல் இன்று (19ம் தேதி) வரை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை  சுப்பிரமணியசுவாமி  கோயிலில் ஜனவரி 17,19,19 ஆகிய 3 நாட்கள் நடைபெறவிருந்த தைப்பூச உற்சவம் மற்றும் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தைப்பூசமான இன்று (17ம் தேதி) தைப்பூச உற்சவர் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் கோயில் மூலமாக நடத்தப்படும். அச்சமயம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 19ம் தேதி தடை உத்தரவு நிறைவுற்ற பின் 19,20 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக தைப்பூசத் திருவிழாவின்போது கோவை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி எடுத்து கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவர். மேலும் அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், பல்லடம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் வருவதுண்டு. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: