பார் ஒதுக்கீட்டில் ‘செட்டிங்’ ஏலம்?

கோவை, ஜன.19: கோவை மாவட்டத்தில் 278 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளின் அருகே பார்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்குடன் பார் நடத்திய நபர்கள், தற்போதும் தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பினர். குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில், 130 பார்களை யாருக்கும் விட்டுத்தராமல் தொடர்ந்து நடத்த முயன்றனர். உரிய விதிமுறை, டெபாசிட் தொகை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கும் தகுதியான நபர்களுக்கு பார் ஏலம் விடப்படவேண்டும். ஆனால் இந்த முறை பார் ஏலம் விதிமுறைப்படி நடக்கவில்லை என பார் உரிமையாளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். டாஸ்மாக்கில் உச்ச பட்ச தொகை ஏலமாக கேட்டவர்களை காட்டிலும் கூடுதலாக சில நூறு ரூபாய் அதிகம் சேர்த்து அவர்களுக்கு பார்கள் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மாவட்ட அளவில் பார்கள் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் விடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பார் ஏலம் எடுத்தவர்கள், வேறு ஒரு நபருக்கு பல லட்ச ரூபாய்க்கு அந்த பாரை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பார் விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு பல்வேறு தரப்பினர் புகார் அனுப்பியதை தொடர்ந்து உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தந்த பார்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் விடப்பட்டது, முறையான ஆவணங்கள் இருந்ததா?, செட்டிங் ஏலம் நடந்ததா?, பார்களை ஏலம் எடுக்காத வேறு நபர்கள் பார்களை நடத்தி வருகிறார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘பார் ஏலம் முறையாக நடக்கவில்லை. ஏலம் எடுத்தவர்கள் கைமாற்றி விட்டு வருகின்றனர். பார்களில் அதிகளவு முறைகேடாக மது விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். அதிக தொகைக்கு ஏலம் எடுத்தவர்கள் கேரளா, பாண்டிச்சேரி மதுபானங்களை கடத்தி வந்து விற்கவும் வாய்ப்புள்ளது. குடி பிரியர்களை மேலும் ஏமாற்றும் வகையில் பார்கள் ஒப்படைப்பு நடந்திருக்கிறது. டாஸ்மாக் நிர்வாகம் கலால், சட்டம் ஒழுங்கு தொடர்புடையது. கடந்த காலங்களில் முதல்வர் வசம் இந்த துறை இருந்தது. இதனால் விதிமுறை மீறல் வெகுவாக குறைந்திருந்தது. இந்த துறையை முதல்வர் வசம் ஒப்படைத்தால் சிறப்பாக இருக்கும்’’ என்றனர்.

Related Stories: