×

காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

பவானி, ஜன. 19: ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 57 கிமீ பாசன கால்வாய் வெட்டிய காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலிங்கராயன் தினத்தையொட்டி பவானி அருகே மேட்டுநாசுவம்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர், காலிங்கராயன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி 1282ம் ஆண்டு காலிங்கராயன் கால்வாயில் இதே நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்பணிக்கு காரணமாக இருந்தவர் காலிங்கராயன். எவ்விதமான விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத காலத்தில் போதிய வசதிகள் இல்லாத நேரத்தில் தனது சொந்த முயற்சியில் சுமார் 57 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டினார்.
இன்றைக்கு மூன்று போகமும் தண்ணீர் பாயும் வகையில் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளை, தான் வெட்டிய கால்வாயின் மூலம் இணைத்த இவர், நதிகள் இணைப்புக்கு முன்னோடியாக உள்ளார். பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் காவிரியில் கலந்து கடலுக்கு வீணாகச் சென்று கொண்டிருந்தது. சுமார் 700 ஆண்டுக்கு முன்பாக தொலைநோக்குப் பார்வையுடன் வீணாகும் தண்ணீரைக் கொண்டு விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றியவர் காலிங்கராயன். இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, பவானி நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன், ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் டி.சதாசிவம் (ஈரோடு வடக்கு), கே.பி.துரைராஜ் (பவானி தெற்கு), மாவட்டப் பிரதிநிதி ராஜசேகர், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), பண்ணாரி (பவானிசாகர்), முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமாகா சார்பில் காலிங்கராயன் சிலைக்கு ஈரோடு மத்திய மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.ஈஸ்வரமூர்த்தி, விவசாய அணிச் செயலாளர் எஸ்.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை