புஞ்சை புளியம்பட்டி அருகே பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச தேரோட்டம்

சத்தியமங்கலம், ஜன. 19:  புஞ்சை புளியம்பட்டி அருகே கொண்டையம்பாளையத்தில் உள்ள பொன்மலை ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட தேர் மற்றும் சிறிய தேர் என இரண்டு தேர்கள் வடிவமைக்கப்பட்டு சிவன், சக்தி, முருகன் தெய்வங்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து  மூலவருக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து  வள்ளிதெய்வானை உடன் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட  திருத்தேருக்கு எழுந்தருளினார்.

நேற்று மதியம் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடந்தது. முதலில் சிறிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பெரிய தேர் இழுக்கப்பட்டது. தேர்களில் வள்ளிதெய்வானை சமேதராய் முருகப்பெருமான் மற்றும் விநாயகர், ஈஸ்வரி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  தேர், கொண்டையம்பாளையம் நான்கு ரத வீதிகளில் சென்றது.வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதைதொடர்ந்து தேர்கள் நிலை அடைந்தன. விழாவையொட்டி மூலவர் பொன்மலை ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: