புதிய சாலைகளை போடும்போது பழைய சாலைகள் கட்டாயம் அகற்ற வேண்டும் மாவட்ட அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு மாநிலம் முழுவதும்

வேலூர், ஜன.19:மாநிலம் முழுவதும் புதிய சாலைகளை போடும்போது பழைய சாலைகள் கட்டாயம் அகற்ற வேண்டும். இதை மாவட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் போடும் பணிகளில் பழைய சாலைகளுக்கு மேலேயே புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. அதனால், பல இடங்களில் சாலை மட்டம் உயர்ந்து வீடுகள் பள்ளத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுவதும், இதனால் சாலை சேதமடைவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதாவது, தமிழகத்தில் புதிய சாலைகள் அமைப்பதற்கு முன்பு அங்கு ஏற்கனவே போடப்பட்டு இருந்து, சேதமடைந்திருந்த பழைய சாலையை முழுமையாக சுரண்டி எடுக்க வேண்டும். அதன் பின்னரே அங்கு புதிய சாலை போடப்பட வேண்டும். இதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் சாலை போடும் பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது என்றும், பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், புதிய சாலை போடக்கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் மாவட்ட அதிகாரிகள் தங்கள் பகுதியில் நடக்கும் சாலை போடும் பணியை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் புதிய சாலை அமைக்கும் போது கண்டிப்பாக மில்லிங் செய்த பின்னரே புதிய சாலை போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, ஒரு இடத்தில் சாலை அமைக்கும் போது, பழைய சாலையை சுரண்டி, உயரம் அதிகரிக்காதபடி புதிய சாலை அமைக்க வேண்டும்.

ஆனால், பல இடங்களில் இதை பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்திற்கு சாலை பணி நடந்து வருகிறது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். அதில் பழைய சாலைகள் அகற்றிய பிறகு தான் புதிய சாலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புதிதாக சாலை அமைக்கும் போது பழைய சாலைகளை சுரண்டி எடுத்து சாலையின் மட்டம் உயராத வகையில் அமைக்க வேண்டும் என்று ஒப்பந்தார்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை முறையாக பின்பற்றாத மற்றும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அதிகாரிகள் சாலை பணியை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் பழைய சாலை அகற்றாமல் புதிய சாலை போட்டால் அதுகுறித்து கலெக்டர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: