தனியார் நிதி நிறுவன ஊழியர்களை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை திருவண்ணாமலை அருகே பரபரப்பு சர்க்கரை ஆலையில் பொருட்களை பறிமுதல் செய்ய வந்த

திருவண்ணாமலை, ஜன.19: திருவண்ணாமலை அருகே கடனை திருப்பி செலுத்தாததால் சர்க்கரை ஆலையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய வந்த, தனியார் நிதி நிறுவன ஊழியர்களை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடி கிராமத்தில் கடந்த 2001ம் ஆண்டு அருணாச்சலம் என்ற பெயரில் தனியார் சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. நிர்வாக குளறுபடி காரணமாக, தொடர்ந்து ஆலையை நடத்த முடியாமல், கடந்த 2003ம் ஆண்டு இறுதியில் ஆலை மூடப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு சேர வேண்டிய ₹6 கோடி கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வழக்கும் தொடர்ந்தனர். ஆனாலும், தீர்வு கிடைக்கவில்லை.கடந்த 19 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை செயலிழந்து மூடப்பட்டுள்ளதால், அதில் உள்ள இயந்திர தளவாடங்கள் அனைத்தும் உருக்குலைந்துள்ளன. ஆலையை தொடங்க கடன் வழங்கிய வங்கிகள் தரப்பில், ஆலையை பொது ஏலம்விட முயற்சிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வந்தபோது தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஆலை நிர்வாகம் சுமார் ₹10 கோடி கடன் பெற்று, அந்த கடனை திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தனியார் நிதிநிறுவனம், முதல் கட்டமாக சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திர தளவாட பொருட்களை அகற்றுவதற்கு ₹1 கோடியே 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் நேற்று முன்தினம் நிதிநிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதையறிந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள், நேற்று தனியார் அருணாச்சல சர்க்கரை ஆலை முன்பு திரண்டு, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ₹6 கோடி நிலுவைத்தொகையை வழங்கிவிட்டு, பொருட்களை எடுத்து செல்லுங்கள், அதுவரையில் பணிகளை தொடரக்கூடாது என கூறி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சுரேஷ், ஏடிஎஸ்பி ராஜகாளீஸ்வரன், ஏஎஸ்பி கிரண்சுருதி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் முழு ஏலம்விடப்பட்ட பின்னர் வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே, அதுவரையில் இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அகற்றும் பணிகளை தொடரக்கூடாது என தெரிவித்தனர்.இதையடுத்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், இதுகுறித்து கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் இருக்காது என தெரிவித்தனர். அதன்பேரில், விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: