அண்ணாமலையார் கோயிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டெடுப்பு தண்டராம்பட்டு அடுத்த அகரம் கிராமத்தில்

திருவண்ணாமலை, ஜன.19: தண்டராம்பட்டு அடுத்த அகரம் கிராமத்தில் வயல்வெளியில் அண்ணாமலையார் கோயிலுக்கு தானம் கொடுத்த தகவல் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தண்டராம்பட்டு அடுத்த அகரம் செல்லும் சாலையில் ஆதிசிவன் கோயிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியின் மத்தியில் வேப்பமரத்தின் கீழ் பலகை கல் ஒன்று இருப்பதை கண்டனர். இதுகுறித்து அங்குள்ள மக்களிடம் விசாரித்தபோது அது பலகாலமாக மண்ணில் விழுந்து கிடந்ததாகவும், சில வருடங்களுக்கு முன் அதனை எடுத்து மரத்தின் கீழ் நிறுவியதாகவும் தெரிவித்துள்ளனர்.அந்த கல்வெட்டு குறித்து ஆய்வு செய்த, ராஜ்பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதாவது:மண்ணில் புதைந்திருந்த கற்பலகையில் விஜயநகர காலத்திய எழுத்து தென்பட்டது. சுமார் 5 அடி உயரமும், 3 அகலமும் கொண்ட இப்பலகை கல்லில் முதல் பாதியில் இடது புறம் சூரிய, சந்திரருடன் திருவண்ணாமலை கோயிலுக்கு தரப்பட்ட தானத்தை குறிக்கும் சோணாசலகிரியும், நடுவில் சூலம் மற்றும் வலது புறத்தில் இருகுத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது. இதற்கு கீழ் உள்ள மீதி பாதியில் 16 மற்றும் 17ம் நூற்றாண்டின் எழுத்தமைவில் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது.

என தொடங்கும் இக்கல்வெட்டு சோழர்களையும், சிங்களவர்களையும் வென்றதாக வெற்றி செய்தியை குறிப்பிட்டு \'இராவிந குமாரர் வேங் இராச\' என்பவர் வக்கையூர் என்ற ஊரை தானமாக அளித்து, அதன் மூலம் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை நாச்சியாருக்கும் அர்த்தசாம கட்டளைக்கு 30 பாக்கும் 20 வெற்றிலையும் அடங்கிய அடைகாய அமுது அளித்துள்ளார். இதனை நிறைவேற்ற அவ்வூரை சேர்ந்த மெய் சொல்லும் பெருமாள் அண்ணாமலையார் என்னும் மாகேஸ்வரரை நியமித்துள்ளார் என தெரியவருகிறது.இக்கல்வெட்டில் பெரும்பாலான வார்த்தைகள் பாதி சொற்களாக இருப்பதோடு மன்னர் பெயர் மற்றும் காலம் தெளிவாக தரப்படவில்லை. எனினும் இக்கல்வெட்டில் வேங் என்ற சொல்லை வைத்து இதனை வேங்கடபதி மன்னராக கருதலாம் என்று இக்கல்வெட்டை படித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.விஜயநகர பேரரசின் இரண்டாம் பொன் அத்தியாயத்தை எழுதி சுமார் 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586- 1614) காலத்தில் தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு கொடை வழங்கி இருந்தாலும் குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பல கொடைகள் வழங்கியுள்ளதை 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: