தமிழகத்தின் தென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பக்தர்களின்றி தைப்பூசத் திருவிழா கோ ரதத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா

கழுகுமலை, ஜன.19: தமிழகத்தின் தென் பழநி என பக்தர்களால் போற்றப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின்றி நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன் கோ ரதத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.  கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் பிற கால பூஜைகள் நடந்தன. மேலும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.பொதுவாக திருவிழாவின் போது இரவில்  பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா வரும் நிலையில் இந்தாண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் கோயில் வளாகத்திலேயே எழுந்தருளல் மட்டும் நடைபெற்றது.

 இதே போல் தைப்பூசத்தன்று ஆண்டுதோறும் கோ ரதத்தில் விநாயகப் பெருமானும், சட்ட ரதத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவமூர்த்தியும் எழுந்தருள்வர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தமிழக அரசு விதித்த தடையால் தேரோட்டம் தடைபட்டது. இருப்பினும் பக்தர்கள் அனுமதியின்றி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு  உற்சவமூர்த்தியை வள்ளி, தெய்வானையுடன் கோ ரதத்தில்  எழுந்தருளல் செய்தனர். இதைத்தொடர்ந்து கோ ரதத்தில் இருந்தபடி சுவாமி, அம்பாள் கோயிலில் இருந்து  எட்டாம் பலி பீடம், கீழ ரத வீதி, தேரடி வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து 6.30 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி மற்றும் வள்ளி- தெய்வானைைக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

 இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் மட்டுமே பங்கேற்றனர். ைதப்பூசத்தன்று முருகப்பெருமானை காண வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்றபடி தரிசித்தனர். இவர்களில் ஒரு சிலர் கோயில் வெளிவாசல் பகுதியில் முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செய்து வழிபட்டுச் சென்றனர். தைப்பூசத்திருநாளை முன்னிட்டு கழுகுமலை எஸ்ஐ காந்திமதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: