பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

குளத்தூர், ஜன. 19: குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது வேன் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் முருகன் (24). கூலி தொழிலாளியான இவரும், இவரது நண்பரான  குளத்தூர் அடுத்த கு.சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் தங்கமாரியப்பன் (23) என்பவரும் நேற்று முன்தினம் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றனர். வேலை முடிந்தபிறகு தங்கமாரியப்பனை அவரது கிராமத்தில் விடுவதற்காக முருகன் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கு.சுப்பிரமணியபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

 குறிஞ்சி நகர் பகுதியில் வந்தபோது ராமநாதபுரம் மாவட்டம், சிக்கலைச் சேர்ந்த திருமலை மகன் திலகராஜ் (36) என்பவர் ஓட்டிவந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக இவர்களது பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கிவீசப்பட்ட முருகனும், தங்கமாரியப்பனும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தங்கமாரியப்பனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: