கரூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கந்து வட்டிக்கொடுமை தடுத்து நிறுத்த நடவடிக்கை

கரூர், ஜன. 19: கரூர் நகரில் டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பஸ்பாடி போன்ற மூன்று முக்கிய தொழில்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி நகரைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை குறி வைத்து, கந்து வட்டிக்கு விடும் நபர்கள் கரூர் பகுதியில் அதிகரித்து வருகின்றனர். மீட்டர், எக்ஸ்பிரஸ், தின வட்டி என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு, பின்னர், கொடுத்த பணத்தை விட பல மடங்கு வட்டியாக வசூலித்து அவர்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் கரூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கந்து வட்டி பிரச்னை குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள், புகார் தரவும் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்தான விழிப்புணர்வு மக்களிடம் அதிகளவு போய்ச்சேரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த கந்து வட்டி கொடுமை காரணமாக பல குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த பிரச்னை குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது குறித்தும் தேவையான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: