புதுகை மாவட்டத்தில் முதல்கட்டம் 69 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஆலங்குடி, ஜன. 19: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பாத்தம்பட்டி, வடகாடு, எல்.என்.புரம் பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஆணையின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 69 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் முயற்சியினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் விவசாயிகள் அதிகமான நெல் விளைச்சலை கண்டுள்ளார்கள்.மேலும் விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை இணையதளம் வாயிலாக பதிவு செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் பயனாக விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லினை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

பொதுமக்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக ஆன்லைன் பதிவுகளில் ஏதேனும் சிரமம் இருந்தால் அவற்றை உடனடியாக சீர்செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உஷா செல்வம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கண்காணிப்பாளர் மணிமாறன், மேலாளர் பொன்னுசாமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முறையாக கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு இந்த ஆண்டு எந்தவித குளறுபடிகளுமின்றி விவசாயிகள் விளைவித்த அனைத்து நெல்மணிகளையும் முறையாக கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் முறையில் பதிவு செய்வதால் எந்த சிக்கல்களும் இல்லை. தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்ய அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட கிராமத்து இளைஞர்களும் உதவி செய்வார்கள் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Related Stories: