வழிப்பறி வழக்கை விசாரிக்க சென்றபோது போலீஸ் எஸ்ஐக்கு சரமாரி கத்தி வெட்டு : காவலரையும் கடித்துவிட்டு தப்பிய ரவுடிக்கு வலை

சென்னை: வழிப்பறி வழக்கை விசாரிக்க சென்றபோது போலீஸ் எஸ்ஐயை சரமாரியாக கத்தியால் வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(30). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு, தடா  உள்பட பல காவல் நிலையங்களில் உள்ளன.இந்நிலையில், கும்மிடிப்பூண்டி போலீசில், யுவராஜ் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக புகார் வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க எஸ்ஐ பாஸ்கர், இரண்டாம் நிலை காவலர் விமல் ஆகியோர் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

அப்போது யுவராஜ் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, யுவராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென எஸ்ஐ பாஸ்கரின் கையை சரமாரியாக வெட்டினார். மேலும், இதை தடுக்க முயன்ற இரண்டாம் நிலை காவலர் விமலை  கடித்து விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றார். இதனால் வலியால் இருவரும் அலறி துடித்தனர்.தகவலறிந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் ஆத்துப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில், யுவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், எஸ்ஐ பாஸ்கர், விமல் ஆகியோர் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: