மாணவனை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம்(21) என்ற நபர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். முகக்கவசம் அணியாமல் சென்றதால் போலீசார் அவரிடம் முகக்கவசம் அணியும் படி அறிவுறுத்தினர். அப்போது போலீசாருக்கும் அப்துல் ரஹீமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியில் இருந்த காவலர் உத்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்துல் ரஹீமை கைது செய்த போலீசார் அவரை கடுமையாக தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை மாநகர கமிஷனர் அதுவரை கொடுங்கையூர் காவலர் உத்திரகுமார் மற்றும் ஏட்டு பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை கொடுங்கையூர் இ.பி.சந்திப்பு அருகே இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட தலைவர் காவியா மற்றும் செயலாளர் நித்தீஷ தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் மாணவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு காவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர்கள் ராஜன் அம்பேத்கர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: