தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்கள்: தட்டிக்கேட்ட ரயில்வே போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்களை போலீசார் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறநகர் ரயில்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களான பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, அரிநாராயணபுரம் ஆகிய பகுதிகளில் அதிக மின்னழுத்தம் ஏற்படுவதால் வேகத்தை குறைத்து ரயில்கள் மெதுவாக செல்லும். அப்போது, படிக்கட்டில் பயணிக்கும் ரயில் பயணிகளிடம் இருந்து செல்போனை மர்ம நபர்கள் பறித்து செல்வது வழக்கம். இந்த பகுதிகளில் இதுபோன்று தொடர்ந்து நடக்கிறது. இதனால், தண்டவாளம் பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அதே பகுதியை சேர்ந்த சார்லஸ், காந்தி, மகி, பவுல் உள்ளிட்ட 5 வாலிபர் மது அருந்திகொண்டிருந்தனர். இதை பார்த்த ரயில்வே போலீசார், `இங்கு யாரும் மது அருந்தக்கூடாது. இங்கிருந்து செல்லுங்கள்’ என கூறினர்.

 இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து ரயில்வே போலீசாருடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அங்கு வந்த போலீசார், 5 வாலிபர்களையும் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களது உறவினர், `போதையில் தவறு செய்துவிட்டனர். அவர்களை விட்டுவிடுங்கள்’ என கெஞ்சி கேட்டுக்கொண்டனர். இதனால் அவர்களுக்கு எச்சரிக்கைவிடுத்துவிட்டு போலீசார் சென்றனர். இருந்தபோதிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: