மாநகர போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி

திருச்சி, ஜன. 12: திருச்சி மாநகர போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கமிஷனர் கார்த்திகேயன் நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 6ம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்படும், ஞாயிற்றுகிழமைகளில் தமிழகத்தில் முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மருத்துவ ஊழியர்கள், முன்கள பணி்யாளர்கள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் திருச்சி மாநகரில் உள்ள காவலர்கள் அவர்களின் நலன்கருதி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2வது தவணை தடுப்பூசி 95 சதவீத போலீசாரும் செலுத்தி கொண்டனர். மேலும் 2வது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். இதில் திருச்சி மாநகர காவல் துறையில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்த போலீசார் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூறப்பட்டது. இதில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். தொடர்ந்து கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தகுதியான காவலர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றார். மாநகரில் 1,400க்கும் மேற்பட்ட போலீசார் 2 தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில், படிப்படியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 500 காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆர்வமுடன் போலீசார் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: