3 ஆயிரம் மனுக்கள் குவிந்தன

நாமக்கல்: நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் மக்களை தேடி திட்டத்தின் கீழ், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்கள், மற்றும் நகர்ப்புற பகுதியில் 14 நாட்கள் அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 2443 மனுக்களை எம்எல்ஏவிடம் அளித்தனர். முதியோர் உதவித்தொகை, சாலைவசதி, சாக்கடை வசதி, இலவச வீட்டுமனைப்பட்டா போன்றவை கேட்டு அதிக அளவில் மக்கள் மனுக்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து ராமலிங்கம் எம்எல்ஏ நேற்று கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நகராட்சியுடன் கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், முதலைப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் சாலைவசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.

பல கிராமங்களில் இந்த பிரச்னை இருக்கிறது. அனைத்து பிரச்னைகளும் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும். கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டுக்கு முன் பெற்ற இலவச வீட்டுமனை பட்டா கூட முறைப்படுத்தி இன்னமும் கொடுக்கப்படவில்லை.இது தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் மட்டும் மொத்தம் 3 ஆயிரம் மனுக்கள் இதுவரை மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.  அனைத்து மனுக்களும் துறைவாரியாக பிரித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் அனைத்து மனுக்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும். அந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 9 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தற்போது 5 தொட்டிகளில் இருந்து, சோதனை அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ராமலிங்கம் எம்எல்ஏ தெரிவித்தார்.

Related Stories: