மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகமாக வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், பிராணவாயு உருளைகள், அனைத்து வகையான உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா தொற்று உள்ளவர்களை உள்நோயாளிகளாக அனுமதிக்க வேண்டும்.அதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றிற்கான தகவல் பலகைகள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியுமாறு ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்கள் பொது மக்கள் பார்வைக்கு தெரியுமாறு ஒட்டப்பட வேண்டும். மேலும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இறப்பு நிகழுமாயின் அதற்குண்டான அனைத்து விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: