கிராம பஞ்சாயத்துகளில் கோபுர மின்விளக்குகள் அமைக்க தடை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஊரக பகுதிகளில் தெரு மின்விளக்குகளை ஏற்படுத்தி பராமரித்தலிலும், கொள்முதல் செய்வதிலும், தேர்வு செய்வதிலும் மறு உத்தரவு வரும் வரையில் மூன்றடுக்கு ஊராட்சிகள் உரிய நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும். இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு வழிகாட்டுதல்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஊரக பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட, நிறுவப்பட்ட தெருவிளக்குகளை கிராம ஊராட்சிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெரு மின்விளக்குகளை ஏற்படுத்தி பராமரித்தலிலும், தெரு மின்விளக்குகள் கொள்முதல் செய்வதிலும், பராமரிப்பதிலும், தெருவிளக்கு வகைகளை தேர்வு செய்வதிலும் பெருத்த அளவில் மாறுபாடுகள் காணப்படுபதால், மறு உத்தரவு வரும் வரையில் மூன்றடுக்கு ஊராட்சிகள் பின்வரும் நிபந்தனைகளை, முழுமையாக பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு ஊராட்சிகள் எந்தவொரு நிதியிலிருந்தும், உயர்கோபுர மின்விளக்குகள், சிறுமின் கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட தடைசெய்யப்படுகிறது. சோலார் உயர்மின்கோபுர விளக்குகள் அமைப்பது முழுவதும் மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது. சோலார் எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்தல் உடனடியாக தடை செய்யப்படுகிறது.

மீறி கொள்முதல் செய்யும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீறி கொள்முதல் செய்யப்படும், நிறுவப்படும் சோலார் எல்.இ.டி விளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள், சிறுமின்கோபுர விளக்குகள், சோலார் எல்.இ.டி. விளக்குகள் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் தொகையை, தொடர்புடைய அலுவலர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  எனவே அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: