கொரோனா பரவலால் ஊட்டி உழவர்சந்தை என்சிஎம்எஸ் மைதானத்திற்கு மாற்றம்

ஊட்டி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டி உழவர் சந்தை என்சிஎம்எஸ் மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், முக கவசம் அணிதல், கை கழுவதல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சமூக இடைவெளியை பின்பற்ற அனைவரையும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பொதுக்கள் அதிகம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க தற்போது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்த உழவர் சந்தை, தற்காலிகமாக என்சிஎம்எஸ் மைதானத்திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது. நேற்று முதல் ஊட்டி என்சிஎம்எஸ் மைதானத்தில் விவசாயிகள் கடைகளை வைக்க துவங்கி உள்ளனர்.

மேலும், இங்கு மக்கள் அதிகம் கூடாத வகையில், கடைகள் சமூக இடைவெளி பின்பற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று ஊட்டி மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகம் கூடாத வகையில், பழக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: