நீலகிரியில் கொரோனா பரவலால் சளி மாதிரி பரிசோதனை 1500 ஆக அதிகரிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி சளி மாதிரி பரிசோதனை 1500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு பின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின் தொற்று பாதிப்பு குறைந்து 4 மாதங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்தன. இதன் காரணமாக, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து இருந்தது. இந்த சூழலில் இம்மாதம் 2ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகி வந்த நிலையில், தற்போது கடந்த 8 நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 55 பேர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின், மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் அதிகபட்சமாக 92 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 8 நாட்களில் மட்டும் 321 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி மொத்த பாதிப்பு 34 ஆயிரத்து 765 ஆக உள்ளது.

இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் நீலகிரியில் தினசரி பாதிப்பு 600 வரை சென்றது. அதேபோல், பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் எனவும், அப்போது நீலகிரியில் தினசரி பாதிப்பு உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாதிப்பை எதிர்கொள்ள வசதியாக கோவிட் கேர் மையங்கள் அமைத்து கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறியதாவது:நீலகிரியில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் உள்ள 173 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். வெளியூர்களுக்கு சென்று வருபவர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நீலகிரி திரும்பிய 121 பேர் 7 நாட்கள் வீட்டு தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில், 32 பேர் தவிர்த்து மீதமுள்ளவர்களுக்கு 8வது நாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாள்தோறும் 1400 முதல் 1500 பேர் வரை பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி தனியார் பள்ளியில் 189 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு தொற்று பாதித்த 56 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரியில் கொரோனா பரவல் 0.6 சதவீதம் இருந்தது. தற்போது 9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அடுத்த மாதம் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: