மண்டல வாரியாக அலுவலர்கள் நியமனம்: மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 குழு

கோவை: கோவை மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:கோவை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் வீதம் மொத்தம் 5 வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர், ஐந்து குழுவாக பிரிந்து, தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். வடக்கு மண்டலத்திற்கு மீனாட்சி சுந்தரம், தெற்கு மண்டலத்திற்கு செல்வசுரபி, கிழக்கு மண்டலத்திற்கு பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மேற்கு மண்டலத்திற்கு ஷர்மிளா, மத்திய மண்டலத்திற்கு கோவிந்தராஜிலு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பான விபரங்கள், தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களின் விபரங்கள் போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  மேலும், காய்ச்சல் அறிகுறி கண்டறியும் முன்கள பணியாளர்கள் 500 பேர், வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும் 5 சிறப்பு மருத்துவக்குழு மற்றும் நாள்தோறும் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும்.  இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் பேசினார். கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: