3வது அலையை எதிர்கொள்ள 12,059 படுக்கைகள் தயார்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7,368 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 4191 படுக்கை வசதிகள் உள்பட மொத்தம் 12,059 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் ஆக்ஸிஜன் படுக்கை வசதி 6,800.

மாவட்டத்தில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 946 பேர் முதல் கட்ட தடுப்பூசி போட்டு உள்ளனர். இன்னும் 87,454 பேர் முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியது உள்ளது. அவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி 80.98 சதவீதம் பேர் போட்டுள்ளனர். 100 சதவீதத்தை எட்டி தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் தினமும் தினசரி 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனை 12 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் மாவட்ட எல்லைகளில் உள்ள 11 சோதனைச்சாவடிகளில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் வார்டுகளில் 100 சிறப்பு அதிகாரிகள், 33 பேரூராட்சிகளில் 33 அதிகாரிகள், 7 நகராட்சி அதிகாரிகள் உள்பட 152 சிறப்பு அதிகாரிகள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 2,206 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 1,105 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3,311 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சனிக்கிழமைகளில் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க கூட்டம் அதிகமாக வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர்க்க வேண்டும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை  கட்டுப்படுத்த முடியும். தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் கூடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது சம்பந்தமாக வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு 1 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது உள்ளது. இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஊசிகளும் போட்டு முடிக்கப்படும். பூஸ்டர் டோஸ் 70 ஆயிரத்து 950 பேருக்கு போடப்படவேண்டும். இதுவரை 1,670 பேருக்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பொங்கல் பண்டிகையையொட்டி

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம் கோவை, ஜன. 12:  பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறியதாவது: கோவை காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் பகுதிக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மார்க்கம் செல்லும் பேருந்துகளும், கொடிசியா திடலில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பேருந்துகள், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பேருந்துகள், தேனிக்கு 40 பேருந்துகள் என 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கொடிசியா மைதானம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை (இன்று) முதல் அங்கு பேருந்துகள் இயக்கப்படும்.

கொரோனா பரவலையொட்டி அரசின் வழிகாட்டுதலின்படி 75 சதவீத பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பேருந்தில் பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பருத்தி விலையை குறைக்க ‘சிஸ்பா’ கோரிக்கை பீளமேடு, ஜன. 12: தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு பின் நூற்பாலைகள் சீராக செயல்பட்டு பஞ்சு தேவை  அதிகரித்து வந்த நிலையில், பஞ்சின் சராசரி விலை ஒரு கண்டிக்கு (355 கிலோ) ரூ.37 ஆயிரமாக இருந்தது.

இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.60 ஆயிரமாக உயர்ந்தது. தற்போது ரூ.80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பஞ்சு வரத்து சுமார் 198 லட்சம் பேல்களாக இருந்தது.  2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 121 லட்சம் பேல்கள்தான் வந்துள்ளது.  இதன்மூலம், 77 லட்சம் பேல்கள் பஞ்சு வரத்து பற்றாக்குறையாக உள்ளது. தற்போது, பெரிய வர்த்தக  நிறுவனங்களின் ஆதிக்கம் உயர்ந்துள்ளதால் பஞ்சின் விலை உயர்ந்துள்ளது.

பஞ்சை வெளிநாட்டிலிருந்து  இறக்குமதி செய்யலாம் என்றால் பருத்தியின் மீது விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியினால் இறக்குமதி  செய்ய முடியவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு பருத்தி விலை உயர்வினால் பல நூற்பாலைகள் உள்பட  அனைத்து ஜவுளித்தொழில்களும் மூடப்பட்டன. எனவே, பருத்தி விலை தொடர்ந்து நீடித்தால் நாட்டின் முழு ஜவுளி சங்கிலியையும் பாதிக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. இது, நூற்பாலைகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பிரச்சினையில் ஒன்றிய அரசும், மாநில  அரசும் தலையிட்டு, பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும். ஒட்டுமொத்த ஜவுளித்தொழில் சீராக நடைபெற வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். கனிமவள கொள்ளையை தடுக்க

11 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் மொத்தம் 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவாறே கண்காணிக்கும் வகையில் பெரிய அகண்ட திரை பொருத்தப்பட்டிருந்தது. இதனை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

இதில் வாளையார், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், ஜமீன் காளியாபுரம், நடுபுநி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், சென்மாம்பதி, மாங்கரை, ஆனைகட்டி, வடக்கு காடு உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இணையதள வசதியுடன் பொருத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து தரவுகள் 24 மணி நேரமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகண்ட திரையில் தெரியவரும். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.

Related Stories: