பெருந்துறை, சென்னிமலையில் ரூ.1.87 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு:  பெருந்துறை, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கடந்த 10ம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டத்தில், அந்தந்தப் பகுதிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

அதன்படி, பெருந்துறையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பட்டப்படிப்பு பயின்ற 153 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 76 லட்சத்து 50 ஆயிரம் திருமண உதவித் தொகையும், பட்டதாரி அல்லாத 81 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.22 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித் தொகைகளையும், 234 பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.88 லட்சத்து 84 ஆயிரத்து 44 மதிப்பிலான 1,872 கிராம் தங்கம் ஆகியவற்றை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 7 பேருக்கு முதியோர் உதவித்தொகை, ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு வேட்டி, சேலைகளையும் அமைச்சர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காயத்திரி இளங்கோ, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, வட்டாட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: