ஊரடங்கு கட்டுப்பாடு அதிகரிப்பு: ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்

ஈரோடு: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தையில் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் செயல்பட்டு வரும் ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 2 வாரங்களாக வியாபாரம் அமோகமாக இருந்து வந்தது.

இந்த வாரம் கடைசி வாரம் என்பதால் கடந்த வாரத்தை விட அதிக அளவில் வியாபாரம் நடக்கும் என்று சந்தை வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து அரசு உத்தரவிட்டதையடுத்து நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லரை வர்த்தகம் மட்டும் 30 சதவீதம் அளவுக்கு நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகை சீசன் வியாபாரம் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. வேட்டி, சட்டை, சேலை, லுங்கி, பனியன் மற்றும் உள்ளாடைகள், துண்டு ஆகியவை அதிக அளவில் விற்பனையாகி வந்தது. கடைசி வாரம் என்பதால் வியாபாரம் அதிக அளவில் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வரவில்லை. இதனால், இந்த வாரம் மொத்த வியாபாரம் முற்றிலும் பாதித்துவிட்டது. சில்லரை வியாபாரம் மட்டும் 30 சதவீதம் வரை நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: