அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களுக்கு கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஊதியம் வழங்காததை கண்டித்து, மருத்துவமனை வளாகத்தில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் சமரசம் பேசினார். அப்போது, முதன்நிலை மருத்துவர்களுக்கு மட்டும் அக்டோபர் மாத ஊதியத்தை இன்றே (நேற்று) அவரவர் வங்கி  கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள மருத்துவர்களுக்கு கலெக்டர்  மூலம் மேலிடத்தில் பேசி 1 வாரத்தில் முழுமையான ஊதியத்தை வழங்குவதாக  உறுதியளித்தார்.

அதற்கு, பயிற்சி மருத்துவர்கள் சம்மதிக்கவில்லை. 3 மாத ஊதியத்தை அனைவருக்கும் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பயிற்சி மருத்துவர்களின் திடீர் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், நாங்கள் தினமும் ஓய்வில்லாமல் 24 மணிநேரமும் பணியாற்றுறோம். கொரோனா முதல் அலையை தொடர்ந்து தற்போதைய 3வது அலை வரை நாங்கள் அனைவரும் ஓய்வின்றி உறக்கமின்றி கடுமையாக உழைக்கிறோம். ஆனாலும், கடந்த 3 மாதமாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. இதனால், மிகுந்த பண கஷ்டத்தில் இருக்கிறோம். மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் டிஎன்ஐ உள்பட அனைத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதற்கு, கடந்த 10ம் தேதி எங்களது 3 மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம் என்றனர்.

Related Stories: