மாவட்ட பள்ளிகளில் 74,106 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் ஆவடி நாசர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் சிஎஸ்ஐ கௌடி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், மத்திய வட்டார நிர்வாகிகள் கிதியோன் தினகரன், ஏசுதாஸ், டைட்டஸ், பள்ளி நிர்வாகக் குழு தலைவர் வக்கீல் எஸ்.கே.ஆடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஏ.ஸ்டேன்லி தேவபிரியம் அனைவரையும் வரவேற்றார். முகாமை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் ஆவடி நாசர் கூறியதாவது: மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 10ம் தேதி வரையில் 74106 மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் 850 பேருக்கு அவர்களின் விருப்பப்படி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரையில் முதல் தவணை 87.06 சதவீமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 62 சதவீதமும் செலுத்தியுள்ளனர். இதுநாள் வரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேர் ஒமிக்ரான் பாதித்து குணமடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த முகாமில் திமுக நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் மற்றும் நகர நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

*கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு சீருடை: திருத்தணி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் நேற்று  சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, வருவாய் கோட்டாட்சியர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி வரவேற்றார். இதில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று கோயிலில் பணிபுரியும் 196 ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு 2 செட் சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி உள்பட கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: