கண்ணமங்கலம் அருகே பொங்கலுக்கு மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி

கண்ணமங்கலம், ஜன.12: கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பொங்கல் சிறப்பு பூஜைகளுக்கு பயன்படுத்துவதற்காக மஞ்சள் கொத்து அறுவடை செய்து, பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை மறுதினம் உலகெங்கும் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது கரும்பும் மஞ்சளும்தான். தை திருநாளில் நெற்பயிர் மற்றும் கரும்புக்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கும் நல்வாழ்வு தரும் பொருட்கள் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகும். தமிழர் மரபில் மஞ்சளை வணங்கிவிட்டுத் தான் பெரும்பாலான நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. மஞ்சள் நீர் தெளிக்கப்பட்ட களத்தில்தான் சூரிய பொங்கல் வழிபாடு நடக்கும்.

மங்களப் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால்தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கைக் கீறி, சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம், படவேடு, காட்டுக்காநல்லூர், கல்பட்டு, அரசம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மஞ்சள் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது.

இங்கிருக்கும் விவசாயிகள் பொங்கலுக்கு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு தேவையான மஞ்சள் கொத்துக்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதன்படி இந்த கிராமங்களிலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் கொத்துக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகளும் நேரில் வந்து விவசாயிகளிடமிருந்து மஞ்சள் கொத்துக்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மஞ்சள் சாகுபடியின் மூலம் விவசாயிகள் மட்டும் அல்லாமல், இதனை சார்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், வியாபாரிகளும் பயனடைகின்றனர்.

Related Stories: