செய்யாறு அருகே முன்விரோத தகராறு ஊராட்சி தலைவரின் கணவரை கடத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது 4 பேருக்கு வலைவீச்சு

செய்யாறு, ஜன.12: செய்யாறு அருகே, முன்விரோத தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை காரில் கடத்தி கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை (50). இவரது மனைவி பிரபாவதி. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (36). இவர் செய்யாறு காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திருமலை, மகாஜனம்பாக்கம்- பெரும்புலிமேடு சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக காரில் வந்த ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி திருமலையை கடத்தி சென்றுள்ளனர். மடிப்பாக்கம்- பாண்டியம்பாக்கம் சாலையில் உள்ள பாழடைந்த கட்டித்தில் வைத்து சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலை, அவர்களை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து தூசி போலீசில் திருமலை புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராமை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர். கடத்தல் சம்பவத்தில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: