ராதாபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் ₹1 கோடி ஊழல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

திருவண்ணாமலை, ஜன.12: திருவண்ணாமலை அருகே ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் ₹1 கோடி ஊழல் செய்துள்ளதாகவும், செயலாளர் உட்பட சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக சேகர் பணியாற்றி வருகிறார். இவர் அதிமுகவை சேர்ந்த சங்க தலைவர் துணையுடன் பல்வேறு வகையான முறைகேடுகளை செய்து வருகிறார். செயலாளராக பணிபுரியும் சேகர், விற்பனையாளர் பணியில் கையாடல் செய்தமைக்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர். அதிகாரிகளின் துணையுடன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இச்சங்கத்தில் கடன் வழங்குதலில் கையாடல் செய்துள்ளது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ₹6 லட்சம் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகைய முறைகேடுகளை மேற்கொண்டுள்ள செயலாளரை தற்போது நிர்வாக செயலாளராக பொறுப்பில் அமர்த்தியுள்ளதால் மீண்டும் முறைகேடுகள் செய்து வருகிறார். ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் வழங்கி செயலாளர் கையாடல்கள் செய்துள்ளார். இந்த கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் ₹1 கோடி ஊழல் நடந்துள்ளது. எனவே நேர்மையான அதிகாரிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினால். இச்சங்கத்தில் நடபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் கையாடல்களின் விபரங்கள் தெரியவரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: