காட்பாடியில் நள்ளிரவு சோதனை ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர், ஜன.12: காட்பாடி ரயில் நிலையத்தில் நள்ளிரவு நடத்திய சோதனையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக பஸ், ரயில், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுகிறது. இதனால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதேபோல் ரயில்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனைகளும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் கடத்தல்காார்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையம் 4வது பிளாட்பாரத்தில், அட்டியா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வந்து நின்றது. அப்போது காட்பாடி ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது, டி2 கோச்சில் சோதனை செய்தபோது, கழிவறையில் கேட்பாற்று கிடந்த 3 பைகளை கைப்பற்றினர். அதில் சோதனை செய்தபோது, 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: