கூட்டுறவு பதிவாளர் உத்தரவு 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்த கூட்டுறவு சங்க உறுப்பினர் விவரங்களை அனுப்ப வேண்டும்

வேலூர், ஜன.12: தமிழகத்தில் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்த கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைப்பது தொடர்பான மசோதா ஒன்றை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலமானது 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர், அனைத்து இனைப்பதிவாளர், துணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன் காலாவதியாகிவிட்ட உங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரியத்தின் 3 வருட பதவிக்காலம் முடிவடைவது தொடர்பான விவரங்களை உடனடியாக மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்களின் 3 ஆண்டு பதவிக்காலம் வாரியத்தின் உறுப்பினர்களின் தேர்தல் தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிவு 33 (10)(a) மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: