நாகர்கோவிலில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர்

நாகர்கோவில், ஜன.12:  நாகர்கோவிலில்  கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இருநாட்கள் முன்பு  நாகர்கோவில் மாநகராட்சி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் ஆயிரம் பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில், 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, கூட்டம் கூடும் பகுதிகள்,  கடைகள் வர்த்தக நிறுவனங்களில் சுகாதாரத்துறையினர் கொரோனா விதிமுறைகள் மீறல்கள் நடைபெறுவதை கண்காணித்து, மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனைகளில் 750 பேருக்கும், மாநகராட்சியில் 1,050 பேருக்கும் சளிமாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கை செட்டித் தெருவில், தனிமைப்படுத்தல் நேற்றுடன் 7 நாட்கள் ஆனதுடன், கடந்த 5 நாட்களாக அங்கு யாருக்கும் தொற்று கண்டறிப்படவில்லை. எனவே நேற்று பறக்கை செட்டித் தெரு அடைப்பு திறக்கப்பட்டதாக மாநகர் நல அலுவலர் டாக்டர் விஜய் சந்திரன் கூறினார். நாகர்கோவில் மாநகராட்சியில் மக்களிடம் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வீடுகளில், சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

 பலரும் வீட்டு தனிமையில் இருப்பதாக கூறி வருவதால்,  தனிபடுக்கை அறை, கழிவறை போன்ற  வசதி சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில்  உள்ளதா என ஆய்வு செய்து அதன் பின்னர், வீட்டுத் தனிமைக்கு  அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள்   வீடுகளில் சிவப்பு நிற  ஸ்டிக்கரும், வீட்டு தனிமை என்பதனை அறிய பச்சை நிற  ஸ்டிக்கர்களும் ஒட்டப்படுகின்றன. மேலும், மாநகராட்சி சார்பில், அவர்களுக்கு  தேவையான மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்கப்படுகின்றன. அவர்கள் வீட்டை விட்டுவெளியே வராத வகையிலும், அவர்களின் உடல்நிலை குறித்து சுகாதார பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். போன் மூலமும்  உடல் நலன் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் சிலருக்கு நெஞ்சு  படபடப்பு போன்றவை இருந்தாலோ அல்லது பயத்தில் இருந்தாலோ அவர்களை  ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சை பெற அனுப்பி வைக்கப்பட்டு  வருகின்றனர். தொற்று சரியாகிவிட்டதா என்பதனை அறிய மீண்டும் சளிப்பரிசோதனை  மேற்கொள்ளப்படுவதாக மாநகர நல அலுவலர் விஜய் சந்திரன் கூறினார்.

Related Stories: