பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊழியர்களுக்கு கொரோனா

பெரம்பலூர்,ஜன.12: பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா(40) என்பவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சையோடு தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்துவருவோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் உதவித்திட்ட இயக்குநரான கீதாரத்தினம், கண்காணிப்பாளராக பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, கணினி இயக்குநர்கள் 2 பேர், இளநிலை உதவியாளர், திட்ட இயக்குனரின் தனி உதவியாளர், திட்ட இயக்குநர் மற்றும் செயற்போறியாளர் டிரைவர்கள் உள்ளிட்ட 11 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திட்ட இயக்குநர் அறிவுறுத்தலின்பேரில் நேற்று முதல் 3 நாட்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. அந்த வளாகம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வெளியே இருந்து யாரும் அனுமதியின்றி உள்ளே செல்லக் கூடாதென வளாகத்தின் 2 வழிகளிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

17ம் தேதிக்கு பிறகு அலுவலக வளாகமும், ஜீப்பும் கிருமி நாசினி தெளித்த பிறகே பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: