கடலூர் மாவட்டத்தில் ஆய்வு 2.96 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

கடலூர், ஜன. 11: கடலூரில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் முதல் தவணை 20,86,900 நபர்களும் மற்றும் 15 வயது முதல் 18 வயதுடையவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 76,639 நபர்களும் என மொத்தம் 21,63,539 நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் இரண்டாம் தவணை 16,25,633 நபர்களும்,  முன்னெச்சரிக்கை கொரோனா (ஊக்குவிப்பு) பூஸ்டர் தடுப்பூசியினை சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 2,96,625 நபர்கள் செலுத்தி கொள்ள தகுதியுள்ளவர்கள் என்றார். முன்னதாக செம்மண்டலம் கடைவீதிகளில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகள் கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அங்குள்ள கடை உரிமையாளர்களிடம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு தொற்று பரவலை எடுத்துரைத்து முகக்கவசம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.தொடர்ந்து கடலூர் எஸ்.என்.சாவடியில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்க நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள பொருட்களின் தரம் குறித்தும், நியாயவிலை கடையில் நாள் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட நபர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி சரியான முறையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறா என ஆய்வு செய்து பொங்கல் சிறப்பு தொகுப்பினை கடலூர் சட்டமன்ற உறுப்பினர்  ஐயப்பன் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Related Stories: