தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி, ஜன.11: தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.  தமிழகத்தில்  வட கிழக்கு பருவமழைக்காலம் முடிந்துள்ள நிலையில் ஆடு, மாடு உள்ளிட்ட  கால்நடைகளை மழைக்கால தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்திட ஏதுவாக  அனைத்துப்பகுதிகளிலும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு  மருத்துவ முகாம்களை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்பேரில்,  தூத்துக்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன்  தலைமையில், உதவி இயக்குநர் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் மேற்பார்வையில்  தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட கால்நடை மருத்துவமனைகள் சார்பில் சிறப்பு  கால்நடை மருத்துவ முகாம் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன்படி, இன்று (11ம் தேதி) மாப்பிள்ளையூரணி  மருத்துவமனை சார்பில் தெற்கு சங்கரப்பேரியிலும், நாளை (12ம் தேதி) ஏரல்  மருத்துவமனை சார்பில் கொற்கையிலும், 17ம் தேதி பேரூரணி மருத்துவமனை  சார்பில் அல்லிகுளத்திலும், 18ம் தேதி ஏரல் மருத்துவமனை சார்பில்  ஆறுமுகமங்கலத்திலும், 19ம் தேதி தெய்வச்செயல்புரம் மருத்துவமனை சார்பில்  எல்லைநாயக்கன்பட்டியிலும், 20ம் தேதி கால்வாய் மருத்துவமனை சார்பில்  வல்லக்குளத்திலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடக்கிறது.

 இம்மாதம் 21ம் தேதி செய்துங்கநல்லூர் மருத்துவமனை சார்பில்  விட்டிலாபுரத்திலும், 25ம் தேதி மாப்பிள்ளையூரணி மருத்துவமனை சார்பில்  கருப்பசாமி நகரிலும், 26ம் தேதி பேட்மாநகரம் மருத்துவமனை சார்பில்  அணியாபரநல்லூரிலும், 27ம் தேதி முள்ளக்காடு மருத்துவமனை சார்பில்  அத்திமரப்பட்டியிலும், 29ம் தேதி முடிவைத்தானேந்தல் மருத்துவமனை சார்பில்  வர்த்தகரெட்டிபட்டியிலும்  கால்நடை சிறப்பு மருத்துவ  முகாம் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து  வளர்ப்பவர்களுக்கு ஊக்கபரிசு வழங்கப்படுகிறது. முகாமில், விவசாயிகள்,  பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுடன் பங்கேற்று பயன்பெறுமாறு கால்நடை  பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன், உதவி இயக்குநர் ஆண்டனி  இன்னேஷியஸ் சுரேஷ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: