பஞ்சாப் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பால் மறியல்: பாஜவினர் 48 பேர் கைது

கரூர், ஜன. 11: பஞ்சாப் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜவுக்கு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்களை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் நேற்று காலை பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை எனத் தெரிவித்தனர். இதனால், போலீசார்களுக்கும், பாஜகவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திடிரென பாஜவினர், சாலையில் அமர்ந்து மறியல் செய்ய ஆரம்பித்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 48பேர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: