காவிரி கூட்டுக் குடிநீர் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தகவல் வேலூர் மாவட்டத்தில் பொங்கலுக்குள் வாய்ப்பில்லை

வேலூர், ஜன.11: வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் பொங்கலுக்குள் விநியோகிக்க வாய்ப்பில்லை. இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என்று குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. அதேசமயம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் கனமழை பெய்தது. இதனால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் பாலாற்றில் மழை வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடியது. இதனால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், கரையோரங்களில் கட்டியிருந்த வீடுகள் பாலாற்றில் அடித்துச்செல்லப்பட்டன. அதோடு பாலாற்றில் புதைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன்களும் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதன்காரணமாக கடந்த 2 மாதங்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே பாலாற்றில் அடித்துச்செல்லப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன்கள் சீரமைக்கும் பணிகள் குடிநீர் வடிகால்வாரியத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வாணியம்பாடியில் இருந்து மாதனூரில் ஒருபகுதி வரையில் பைப்லைன் சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. மாதனூரில் இருந்து பள்ளிகொண்டா, வேலூர் ஆகிய பகுதிகளில் பைப்லைன்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பொங்கலுக்குள் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்ய வாய்ப்பில்லை. ஆனால் இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து குடிநீர் விநியோகிக்கப்படும். தொடர்ந்து ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள பைப்லைன்கள் சீரமைக்கப்படும் என்று குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரவிசந்திரன் கூறுகையில், ‘வாணியம்பாடி தொடங்கி, வேலூர், அரக்கோணம் வரையில் பாலாற்றில் பைப்லைன்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது மாதனூரில், தண்ணீர் அதிகளவில் செல்வதால் பைப்லைன் வெல்டிங் செய்வதில் பிரச்னை உள்ளது. எனவே மொரம்பு மண் கொட்டி தண்ணீர் வேகத்தை குறைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாதனூரில் ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து விடும். இதையடுத்து குடியாத்தம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் தொடங்கப்படும். வேலூர் மாவட்டத்திற்கு இம் மாத இறுதிக்குள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகிக்கப்படும் என்றார்.

Related Stories: