கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 36,889 தொலைபேசி அழைப்புகள் மூலம் ஆலோசனை: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் மாநகராட்சிசார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள்  மற்றும் ரிப்பன் மாளிகையில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசி அழைப்பாளர்களால் பின்பற்றப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டு தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும், வீட்டில் கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை உள்ளதா எனவும், அவர்களின் இல்லங்களுக்கு கொரோனா தன்னார்வலர்கள் வருகை தருகிறார்களா எனவும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா எனவும் கேட்டறியப்பட்டு அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அவசர நிலை ஏற்பட்டால் மாநகராட்சியின் கொரோனா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களில் 19 மருத்துவர்கள் மற்றும் 129 தொலைபேசி அழைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொற்று பாதித்த நபர்களில் நாளொன்றிற்கு குறைந்தது 100 பேருக்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் ஒரு துணை ஆட்சியர், 2 மருத்துவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை மையத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை தலைமையிடம் மற்றும் மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 36,889 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: