கொடுக்கல் வாங்கல் தகராறில் வக்கீலை கொல்ல முயன்ற 3 வாலிபர்கள் கைது

திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுகுத்தகை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (40). திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர். செந்திலுக்கும், நடுகுத்தகை, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மதன் (35) என்பவரது மனைவி கனிமொழி (30) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.  இதனால் செந்தில், கனிமொழி வீடு கட்ட சிறிது சிறிதாக ₹5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. செந்தில் கொடுத்த பணத்தை மதன் மற்றும் கனிமொழியிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செந்தில், மதன் வீட்டுக்கு சென்றார். அங்கு, கொடுத்த பணத்தை மதனிடம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மதன், அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆரோன் (எ) அருண்பாபு (26), விக்னேஷ் (எ) ரியாஸ் (20) ஆகியோர் செந்திலை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், அவருக்கு தலை, முகம், வயிற்றில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே 3 பேரும் தப்பிவிட்டனர்.

தகவலறிந்து, செந்திலின் உறவினர்கள் அங்கு சென்று, அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செந்தில், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

புகாரின்படி திருநின்றவூர் ராதாகிருஷ்ணன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மதன், ஆரோன், ரியாஸ் ஆகியோரை நேற்று காலை கைது செய்தார்.

Related Stories: