பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கடைகள் அகற்றம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் ஏரி நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கடைகளை பொதுப்பணி துறையினர் அதிரடியாக அகற்றினர். திருவள்ளூர் - செங்குன்றம் சாலை தாமரைப்பாக்கம் அருகே பூச்சி அத்திப்பேடு கிராமம் உள்ளது. இங்கு கர்லப்பாக்கம், வீராபுரம், பாண்டேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து பூச்சி அத்திப்பேடு வழியாக சோழவரம் ஏரிக்கு மழை காலங்களில் வீராபுரம் ஏரிக்கு உபரிநீர் செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக செல்லும் நீரை, பூச்சி அத்திப்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயத்திற்காக பயன்படுத்தினர்.

இந்தவேளையில், பூச்சி அத்திப்பேடு பகுதியில் நீர்வரத்து கால்வாயை தனியார் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். மேலும் சிலர், அந்த கால்வாயில் ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். கழிவு நீரையும் விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு மற்றும் இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பூச்சி அத்திப்பேடு ஏரிக்கால்வாய் மீது ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை, பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அந்த கடைகளை அதிரடியாக அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: