முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.80,600 அபராதம்: போலீசார் அதிரடி

திருவள்ளூர்: முழு ஊரடங்கின் போது ஊர் சுற்றியதாக 6 வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததாக 403 பேருக்கு ₹80,600 அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று முன்தினம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதைதொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி கார், பைக் ஆகியவற்றில் பலர்  சுற்றித் திரிந்தனர். எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி அனைத்து பகுதியிலும் டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். அதில், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். மேலும் அத்தியாவசிய தேவைகளின்றி முழு ஊரடங்கின்போது ஊர் சுற்றியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததாக 403 பேருக்கு ₹80,600 அபராதம் விதித்தனர்.

ஆவடி: ஆவடி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் ஊரடங்கை கண்காணிக்க அதிகாரிகள், போலீசார் மூலம் சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் 25 காவல் நிலையங்களில் 109 கண்காணிப்பு குழுக்கள், 44 ரோந்து வாகனங்கள் உதவியுடன் 1,750 காவலர்களை கொண்டு தொற்று பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முழு ஊரடங்கை முன்னிட்டு, அத்தியாவசிய தேவையின்றி சுற்றிதிரிந்த 253 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 229 பேருக்கு தலா ₹200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு நேரங்களில் கொரோனா நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொற்று ஏற்படாத வண்ணம் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

Related Stories: