மறைமலைநகரில் அவலம்; பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் அரசு பள்ளி: வேறு கட்டிடத்துக்கு மாற்ற கோரிக்கை

செங்கல்பட்டு: மறைமலைநகரில், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் பள்ளியை, வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் திருவள்ளுவர் சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள்  படிக்கின்றனர். கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம், தற்போது பாழடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதே கட்டிடத்தில் மாணவர்களுக்கான கழிப்பறையும் உள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும்  பெற்றோர்கள்,  கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில், புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. அங்கு, 6 முதல் பிளஸ் 2 வரை மட்டுமே பாடங்கள் நடத்ததப்படுகிறது.

பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் பள்ளியை, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்,   வேறு கட்டிடத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லையில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் போல், இங்கு நடக்க கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

Related Stories: