இன்று முழு ஊரடங்கு அமல் நாமக்கல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

நாமக்கல், ஜன.9: தமிழகத்தில் இன்று முழு நேர ஊரடங்கு அமலாவதால், நாமக்கல் நகரில் நேற்று மாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாமக்கல் நகரின் முக்கிய சாலையான சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்சி சாலை, கடைவீதி உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. மளிகை கடைகள், பேக்கரி கடைகள், காய்கறி கடைளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். மீன், கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்தது. இரவு நேரம் நெருங்க நெருங்க நகரில் உள்ள சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வெளியூர்களில் இருந்து நாமக்கல் வந்தவர்கள், இங்குள்ள கோழிப்பண்ணைகள், லாரிப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கடைகளில் பணியாற்றுபவர்கள் வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, போக்குவரத்து போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் நகரில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: