பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை 11ம் தேதி மீண்டும் நடக்கிறது

குமாரபாளையம்,ஜன.9: விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவது குறித்து,  தாசில்தார் தலைமையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை 11ம்தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விசைத்தறி மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டுமென ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்தது. குமாரபாளையம் தாசில்தார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தும்படி, தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர். அதன்படி நேற்று மாலை தாசில்தார் தமிழரசி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏஐசிசிடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் வெங்கடேசன், மாணிக்கம், விசைத்தறி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், வருவாய்துறையினர், மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. இரணடாம் சுற்று பேச்சுவார்த்தை 11ம்தேதி நடைபெறும் என தாசில்தார் தெரிவித்தார். இதனிடையே நாளை(10ந்தேதி) விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெறுவதாகவும், இந்த கூட்டத்தில் போனஸ் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என விசைத்தறி சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Stories: