×

பெண்ணின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ கட்டி அகற்றம்

ஓசூர், ஜன.9: ஓசூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ கட்டியை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். ஓசூர் அருகே தின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(51). பெயிண்டரான இவரது மனைவி சாந்தி(46). ஓட்டலில் சமையல்  தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சாந்திக்கு கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கட்டியை அகற்ற ₹1.5 லட்சம் செல்வாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குமார் தனது மனைவி சாந்தியை ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிலம்பரசன் மற்றும் கதிரவன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சாந்திக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றின் உள்பகுதியில் கர்ப்பப்பையில் இருந்த 2.5 கிலோ எடையிலான கட்டியை அகற்றினர். கட்டியை அகற்றிய பின்னர் சாந்தி நலமுடன் உள்ளார். இதுகுறித்து ஓசூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பூபதி கூறுகையில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ஏராளமான வசதிகள் உள்ளது. ஏழை -எளிய மக்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். கட்டியை அகற்ற சாந்திக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருந்தால் ₹1.5 லட்சம் முதல் ₹2 லட்சம் வரையிலும் செலவாகியிருக்கும். தற்போது அரசு மருத்துவமனையில் கட்டி அகற்றப்பட்டதால் அந்த செலவு தவிர்க்கப்பட்டது, என்றார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்