பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி நகராட்சி சார்பில், அதிகரிக்கும் கொரோனா தொற்றில் இருந்து காக்க பொதுமக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெறிமுறைகளை கடைபிடிக்கவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் துணி மற்றும் பொங்கல் பொருட்களை வாங்க தர்மபுரி பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகளுக்கு ஏராளமானவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில், நகராட்சி சார்பில் வணிகர்களிடையே ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ரமணசரண், நாகராஜ், சீனிவாசன் ஆகியோர் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமிநாயுடு தெருக்களில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடித்து கடைகளுக்குள் பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.  இதுகுறித்து நகராட்சி சுகாதார துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதயைடுத்து தர்மபுரி மாவட்டத்தில், கொரோனாவை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், அரசு அறிவித்த நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையின்றி சாலையில் திரிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், கொரோனாவை கட்டுப்படுத்த பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: