குமரியில் ஒரு வாரத்தில் 465 பேர் பாதிப்பு கோணம் கல்லூரியில் 250 படுக்கைகளுடன் கொரோனா கேர் சென்டர் தயார் ஆயுர்வேத கல்லூரியும் தயாராகிறது

நாகர்கோவில், ஜன.9 : குமரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து  கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 250 படுக்கைகளுடன் கொரோனா கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் தற்போது பாதிப்பு 100 ஐ நெருங்கிய வண்ணம் உள்ளது. இதனால் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்கும் வகையில், பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.  கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டுள்ள சிகிச்சை வசதிகளை பார்வையிட்ட கலெக்டர் அரவிந்த், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும், ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்கவும் உத்தரவிட்டார் அதன் பேரில் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 138 படுக்கை வசதிகள் 230 படுக்கை வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் இது 400 ஆகவும், அடுத்த வாரம் 800 படுக்கை வசதியும் செய்யப்பட உள்ளது.  ஆக்சிஜன் இருப்பும் தற்போது 18 ஆயிரம் லிட்டர் என்ற அளவில் உள்ளது.

இந்த நிலையில் அதிக நோயாளிகள் வந்தால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக, மருத்துவக்கல்லூரி தவிர பிற இடங்களிலும் கோவிட் கொரோனா கேர் சென்டர் அமைக்க கலெக்டர் உத்தர விட்டுள்ளார். அதன்படி தற்போது கோணத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 250 படுக்கைகளுடன் கொரோனா கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் விஜய சந்திரன் தலைமையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கேர் சென்டர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றி உள்ள புதர்களையும் வெட்டி  அகற்றினர்.

குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை செய்யப்படும் என்று டாக்டர் விஜய சந்திரன் தெரிவித்தார். வீடுகளில் தனிமைப்படுத்திக் ெகாள்ள வசதி இல்லாதவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். இது தவிர ஆயுர்வேத அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. 200 படுக்கைகளுடன் இந்த சிகிச்சை மையம் செயல்படும். இதற்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. ஏற்கனவே கடந்தமுறை பாதிப்பு சமயத்தில் இருந்த படி இந்த சிகிச்சை மையம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி மேற்பார்வையில் இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் 3423 பேருக்கு சளி பரிசோதனை நடந்தது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் புதிதாக 97 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் திருச்சியை சேர்ந்தவர்கள் 2 பேர் ஆவர்.  திருநெல்வேலி, உ.பி.யை சேர்ந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதி 93 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் நாகர்கோவில் மாநகராட்சியில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 16 பேர், கிள்ளியூர் ஒன்றியத்தில் 7 பேர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 11 பேர், மேல்புறம் 4 பேர், முஞ்சிறையில் ஒருவர், ராஜாக்கமங்கலம், திருவட்டார் ஒன்றியங்களில் தலா 3 பேர், தோவாளையில் 5 பேர், தக்கலை ஒன்றியத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 97 பேரில், ஆண்கள் 55 பேர், பெண்கள் 42 பேர் ஆவர். இதில் குழந்தைகள் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 60,985 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 6ம்தேதி 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி, 91 பேர், 5ம் தேதி 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனுமதி

குமரி மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. கிராமப்புறங்களில் லேசான பாதிப்பு உள்ளவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, இருதய பிரச்னை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள், வேறு சில உடல் உபாதைகள் உள்ளவர்கள் மட்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: