குமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திய மக்கள்

நாகர்கோவில், ஜன.9:  குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழக அரசு உத்தரவின்படி நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 525 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் வசதிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களும் தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில் நேற்று காலை முதல் தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொரோனா பரவல் மூன்றாவது அலை குமரி மாவட்டத்தில் வேகம்  அதிகரித்துள்ள நிலையிலும் ஏராளமானோர் புதியதாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி குமரி மாவட்டத்தில் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 58 ஆயிரத்து 646 ஆகும். 2ம் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் இதில் 8 லட்சத்து 77 ஆயிரத்து 731 பேர் ஆவர். மொத்தம் இதுவரை 21 லட்சத்து 36 ஆயிரத்து 377 டோஸ் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள 475 பள்ளிகளில் தகுதியுடைய 15-18 வயதுடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 74 ஆயிரத்து 165 மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 13 ஆயிரத்து 503 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 62 ஆயிரத்து 530 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நாட்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இயங்கும் எனவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அனைத்து துணை சுகாதார மையங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: