வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து தொலைபேசி ஆலோசனை மையம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற் பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சியின்  கோவிட் சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் சென்னை மாநகராட்சியின் சார்பில் மண்டல அலுவலகங்களில் தொலைபேசி ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களில் 19 மருத்துவர்கள் மற்றும் 129 தொலைபேசி அழைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொற்று பாதித்த நபர்களில் நாளொன்றிற்கு குறைந்தது 100 நபர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 7ம் தேதி நிலவரப்படி 15,573 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இவர்களில்  8,166 பேர் லேசான அறிகுறிகளுடன் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களில் இருந்து தொலைபேசியின் வாயிலாக அழைக்கப்பட்டதில் 6,900 நபர்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டது. இதில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இதர கோவிட் அறிகுறிகளுடன் இருந்த 5 நபர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: