கொரோனா நோயாளிகளின் விவரங்களை வழங்காத 6 தனியார் மருத்துவமனை மீது மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்காத 6 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: தனியார் மருத்துவமனைகள், தனியார் சிகிச்சை மையங்கள், பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மையங்களில் சிகிச்சை பெறும் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் குறித்த தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணையின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஏற்கனவே கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 538 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 74 ஸ்கேன் மையங்கள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள், தனியார் சிகிச்சை மையங்கள், பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மையங்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களை பெற மாநகராட்சியின் சார்பில் பூச்சியியல் வல்லுநர்களை கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி தனியார் மருத்துவமனைகளில் இருந்து மாநகராட்சிக்கு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோவிட் தொற்று பாதிப்பு அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் 960 பேரும், ஸ்கேன் மையங்களில் 199 பேரும் என 1159 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக  விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில் அந்த நபர்களை ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 187 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட் தொற்று பாதிப்பு அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் சிகிச்சை பெற்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 187 பேரில் தேனாம்பேட்டை மண்டலத்தில் 57 பேர், அடையாறு மண்டலத்தில் 23 பேர், அண்ணா நகர் மண்டலத்தில் 21 பேர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18 பேர், அம்பத்தூர் மண்டலத்தில் 15 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 பேர் உள்ளனர். இந்த மண்டலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களை மாநகராட்சியின் பூச்சியியல் வல்லுநர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை வழங்காத 6 தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ள விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: